
இன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன். காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன். எத்தனையோ கண்டுவிட்டேன்....பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே. அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும்...