Thursday, May 13, 2010

கடவுள் உண்டா, இல்லையா?

உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும். நாம் "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்று சொன்னால், அவர்கள் கைகொட்டி நகைத்து, "இது கோமுட்டி சாஷி சொன்னதுபோலாம். ஏக காலத்தில் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கும் ஒருபொருளை நாம் எங்கும் கண்டதில்லை. அவ்வாறான பொருள் ஒன்றிருக்கும் என்பது மலடி மக்களைப் பெற்றாள், குருடன் கண்ணாரக்கண்டான், செவிடன் காதாரக்கேட்டான், முயலின் கொம்பு மூன்று முழ நீள மிருக்கும், என்பன போல் பொருளில்லாதனவாகிய வெறுஞ் சொற்களாம்" என்பார்கள். ஆதலால் நாம் அவர்களுக்களிக்கும் விடைகள் இரண்டனுள் முன்னே முதலில் அளிக்கும் மெளன விடையின் கருத்தை விளக்குவோம்.
நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.
உரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது " ஞான வரம்பு" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவதன்று. இதுபற்றியே மேலோர் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்பர். நமது காரைக்காலம்மையாரும் திருமூலநாயனாரும் முறையே.
அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேனின்றுந் திருவுருவங் காண்கிலே - னென்றுந்தானெவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேனெவ்வுருவோ நின்னுருவ மேது எனவும்,
உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப்புரையற் றிருந்தான் புரிசடையோனே.
எனவும் அருளிச் செய்தார்கள்.
ஒருவன் மரணாவஸ்தைப்படும்போது அவனுடைய சுற்றத்தார்கள் அவனைநோக்கி "அப்பா, நீபடும் வேதனையை நாங்கள் அறியச் சொல்" என்று கேட்டால் அவன் "ஐயோ, நான்படும் வேதனையை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பேன்" என்றான். இப்படியே ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை யொருவர் மருவி அனுபவிக்குங் கலவி யின்பத்தைப் பிறர்க்குச் சொல்ல இயல்வதில்லை. இச்சிற்றன்பமும் அனுபவமாத்திரமாயிருப்பது மாத்திரமின்றி, அதற்குரிய பருவம் வந்தபிறகே அனுபவத்திற்கு வருகிறது. இதனை "கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பெனினுங் கைக்கொள்வள் பக்குவத்தில், கணவனருள் பெறின் முனே சொன்னவா றென்னெனக் கருதி நகையாவள்" என்னுந் தாயுமானசுவாமிகள் திருவாக்கும் உணர்த்தும். அதுபோல் பேரின்பமயமாயிருக்கும் கடவுளை மலபரிபாகம் பெற்ற ஞானிகளும் இரண்டறக்கூடி இன்ப மார்ந்திருப்பரேயன்றி பிறர்க்கெடுத்துரையார். ஆதலால், நாமும் நாத்திகர் கேட்கும் கேள்விக்கு விடை வாயினாற் சொல்லப்படுவதன்று என்பதைக் குறிப்பாய் உணர்த்தவேண்டி மெளனமாயிருந்து விடுவோம்.
இனி "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை "அன்பினில் விளைந்தவாரமுதே" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.
அன்றியும் "குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.
தமிழ்வேதம்
எந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்கந்தமாமலருந்திக்கடும் புன னின்வாமல்குகரைமேலந்தண்சோலை நெல்வாயி லரத்துறையடிகடம்மருளே.
வைத்தநிதியேமணியே யென்றுவருந்தித்தஞ்சிந்தைநைந்துசிவனே யென்பார்சிந்தையார்கொத்தார்சந்துங்குரவும் வாரிக்கொணர்ந்துந்திமுத்தாறுடையமுதல்வர்கோயின்முதுகுன்றே.
உலகத்தில் கடவுள் உண்டு என்று நம்பி அவரை வழிபடுவோருள்ளும் தம்முடைய அன்பெல்லாம் மனைவி மக்களிடத்திலும் செல்வ முதலியவற்றிலுமே அழுந்தவைத்திருப்பவர்களுக்கும் கடவுள் இலராகவேயிருக்கின்றார். இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.
தினைத் தனையுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதேநினைத் தொறுங்காண்டொறும் பேசுந்தொறுமெப்போதும்அனைத் தெலும்புண்ணெக வானந்தத்தேன்சொரியும்குனிப்புடையானுக்கே சென்றூதாய்கோத்தும்பீ.
என்றருளிச்செய்தனர்.
கடவுளை அவரருளையே கண்ணாகக் கொண்டு காணவேண்டுமே யன்றி ஆணவமலத்தால் மழுங்கிக் கிடக்கும் சுட்டுணர்வைக் கொண்டு காணலாகாது.
அருளைக் கண்ணாகக் கொண்டு காணும் ஞானிகளுக்குப் பேரொளியாகிய பரசிவம் தோன்றும்; பிரபஞ்சந் தோன்றாது. சுட்டி யறியும் அறிவைக் கொண்டு காணும் ஏனையோர்க்கு அந்தகாரமாகிய பிரபஞ்சந்தோன்றும்; சிவம் தோன்றாது.
தாயுமானசுவாமிகள் பாடல்
"அருளாலெவையும் பாரென்றான் - அத்தை, யறியாதே சுட்டி யென் அறிவாலே பார்த்தேன் - இருளான பொருள் கண்ட தல்லால் - கண்ட வென்னையுங் கண்டில னென்னேடி தோழி - சங்கர சங்கர சம்பு."
திருத்தாண்டகம்
"மைப்படிந்த கண்ணாளுந்தானுங் கச்சிமயானந்தான் வார்சடையானென்னினல்லா. னொப்புடையனல்ல னொருவனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, யப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லா, லிப்படிய னிந்நிறந்த னிவ்வண்ணத்த னிவனிறைவ னென் றெழுதிக் காட்டொணாதே."
இவ்வாறு, சுத்தாத்வைத சித்தாந்த சைவநெறியைக் கடைப் பிடித்துச் சரியை கிரியா மார்க்கங்களிலிருந்து தம்மை வழிபடுவார்க்குச் சிவபெருமான் படர்க்கையாகவும், சிவயோகிகளுக்கு முன்னிலையாகவும், சிவஞானிகளுக்குத் தன்மையாகவும் இருந்து, அருள்செய்வதனாலும், அவரை வழிபடாதவர்க்கு அவர் அவ்வாறிருந்து அருள் செய்தலில்ல்லாமையாலும், நாம்" கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பது.
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகியூனாகி யுயிராகி உண்மையுமா யின்மையுமாய்கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons