Friday, June 4, 2010

ஏமார்ந்த பெண்

கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
(கையிலே)


கண்ணைச் சுற்றி கண்ணீர் உண்டு
உடலை ஒட்டி நோயும் உண்டு
எண்ணம் எல்லாம் பயமும் உண்டு
ஆறுதற்கு - இது காலமும் அன்று
(கையிலே)


தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை
(கையிலே)


கன்னிப் பருவத்திற் கற்சிலையாள்
கற்றாள் நற்பாடம் பொற்சிலையாய்
காதற் கனியொன்று கைப்பிடித்தாள்
தொடர்ந்தாள் நெற்றியில் பொட்டுமிட்டான்
(கையிலே)


உற்றார் உறவினர் ஊர்வலமாம்
ஊரார் வலம் வரக் கச்சேரியாம்
கற்றார் நல்லதோர் நாள் சொல்ல
காலைப் பனியிலே கல்யாணமாம்
(கையிலே)


பெற்றாள் அவள் பெண் இயந்திரமாம்
கற்றாள் பாடம் கடைசியிலே
கணவன் பெற்றான் புதிய களியொன்று
கை விட்டான் சலித்தது இவளென்று
(கையிலே)


உற்றார் மற்றார் சூழ்ந்து வந்து
சுட்டார் வசையால் - செயலிழந்து
செத்தால் உலகம் இனிக்கு மென
இதுதான் முதலும் முடிவுமென
நடந்தாள் - அவனிடம்


கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டு மிங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


இது என்ன வாழ்க்கை?????

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons